யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸார் அங்கிருந்த பெண்களை தாக்குவதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து ஒரு அறையின் கதவை உதைத்துத் திறக்கும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்து பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேம்படி பகுதியில் உரிமம் பெறாத இறைச்சி கடையை நடத்தி வந்த ஒருவர், சிறிய கன்று குட்டியொன்றை கொலை செய்ததாக கடந்த 24ஆம் திகதி தகவல் கிடைக்கப் பெற்றது.
இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்றபோது, சந்தேகநபர் வீட்டின் ஒரு அறைக்குள் ஓடி, கதவை மூடிவிட்டு, அறையைப் பூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரி அறையின் பூட்டிய கதவை உதைந்து பல முறை திறக்க முயற்சித்ததாகவும், அதன்பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com