ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதன்படி, வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும்இ ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த அடையாளம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com