எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்முனை பிரதேசத்தில், சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
குறித்த நடவடிக்கைகள் யாவும் அண்மையில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கலந்துரையாடலின் பின்னர் கல்முனை பிராந்தியத்தில் உரிய திணைக்களங்கள், கல்முனை மாநகர சபை என்பவற்றுடன் இணைந்து பொதுப் போக்குவரத்து நடைமுறைகள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com