இந்த நாட்டில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு வீதி விபத்தில் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் இழக்கப்படுவதாகவும், அது இப்போது கட்டுப்படுத்த முடியாத சவாலாக மாறிவிட்டது என்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மருத்துவ சங்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறினார்.
இதன்போது, நாட்டின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீதி அமைப்பு மிகவும் முன்னேறிய நிலையை எட்டியுள்ள இந்த நேரத்தில், வீதி விபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்து எந்த அறிவியல் விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியார்.
மேலும், நாட்டில் இது தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களோ அல்லது ஆய்வுகளோ நடத்தப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
வீதி பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த நடைபயணம், கொழும்பு காலி முகத்திடலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, லிபர்ட்டி சுற்றுவட்டம் வழியாக விஹாரமஹாதேவி பூங்காவை அடைந்த பின்னர், பொதுமக்கள் விழிப்புணர்வு விழாவுடன் நிறைவடைந்தது.
இந்த பேரணியை சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, இலங்கை மருத்துவ சங்கம், வீதி போக்குவரத்து விபத்து தடுப்பு தொடர்பான இலங்கை மருத்துவ சங்கத்தின் நிபுணர் குழு, பாதுகாப்புப் படைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com