இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில், அமைதி, சுபீட்சம் மற்றும் ஆன்மீக ஈடேற்றத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த ஆன்மீக ஈடுபாடு, இறை வழிபாடுகள் மற்றும் சுய ஒழுக்கத்தினை அதிகரிக்கும் ரமழான் மாதம் இரக்கம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் பெறுமானங்களை எமக்குக் கற்பிக்கிறது.
இந்த புனித மாதத்தில் எமது சகோதர முஸ்லிம் சமூகத்தினர் கடைபிடிக்கும் நோன்பு ஒரு வணக்க வழிபாடாக மட்டுமன்றி, எமது ஆதரவற்ற சகோதர சமூகத்தினர் எதிர்கொள்ளும் போராட்டங்களை எமக்கு நினைவூட்டுகிறது.
அது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்துடனான எமது பிணைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், பொறுமை, பணிவு மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகும்.
கருணை, மன்னிப்பு மற்றும் நற்பணிகளில் ஈடுபடல் போன்ற மனிதநேய செயற்பாடுகளையும் அது உட்பொதிந்துள்ளது.
குறிப்பாக இக் காலப்பகுதியில் நிறைவேற்றப்படும் சகாத் மற்றும் சதகா ஆகிய நட்கருமங்கள் சமூகத்தில் தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதுடன், உண்மையான சுபீட்சம் என்பது அடுத்த மனிதர்கள் எழுந்து நிற்க உதவுவதாகும் என்பதை எமக்கு நினைவூட்டுகிறது.
இவை உலகளாவிய பெறுமானங்களாகும் என்பதுடன், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து சமூகங்களுடனும் மிக ஆழமாக பிணைந்திருக்க வேண்டியவையாகும்.
நாம் வாழும் இலங்கைத் தேசம் பன்முகத்தன்மையினால் வளம்பெற்ற ஒரு தேசமாகும்.
பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மூலம் எமது எதிர்காலத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
ந்த ஈகைத் திருநாள் எமக்கு நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நீதி மற்றும் அமைதியை நோக்கி செயல்பட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Link : https://namathulk.com