அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
வருடத்திற்கு 1.8 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள், வட்டி அல்லது வைப்புத்தொகையிலிருந்து தள்ளுபடிகள் மீது வசூலிக்கப்படும் முன்கூட்டிய வருமான வரியில் (AIT) இன்று முதல் நிவராணம் வழங்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வரிச் சலுகையைப் பெற, தகுதியுள்ள நபர்கள் தங்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சுய அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கமைய வைப்புத்தொகையாளர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி மற்றும் தள்ளுபடிகள் மீதான முன்கூட்டிய வருமான வரியில் (AIT) 10 வீதக் குறைப்பை அமுல்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் , நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனினும் வருடாந்தம் 1.8 மில்லியனுக்கும் குறைவான வருமானத்தை பெரும் தனி நபர்கள், தங்களின் வருமான ஆவணத்தை சமர்பித்து அறவிடப்பட்ட வரியை மீள பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, அரசாங்கம் தனிநபர் வருமான வரி விதிமுறைகளையும் திருத்தியுள்ளது.
இன்று முதல், வரி விதிக்கக்கூடிய மாதாந்த வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருமான வரி சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியும் திருத்தப்பட்டுள்ளது.
1,000 ரூபா அல்லது அதன் ஒரு பகுதிக்கு விதிக்கப்பட்ட 10 ரூபா வரி கட்டணம், இன்று முதல் 20 ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com