நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவர் மரீன் லீ பென் (Marine Le Pen) தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் இந்தத் தடையால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் அரசியலில் இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடாளுமன்ற உதவியாளர்களின் சம்பளத்திற்காக அந்த நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் நிதியை முறைகேடாக கட்சிக்காரர்களின் கணக்குகளில் பல ஆண்டுகளாக மாற்றிவந்ததாக மரீன் லீ பென் மற்றும் 24 கட்சி உறுப்பினர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் குழு நேற்றையதினம் (31) வெளியிட்டது.
குறித்த தீர்ப்பில் மரீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது மட்டுமின்றி, மரீன் லீ பெனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேவேளை, மரீன் லெப்பென்னுக்கு ஒரு இலட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.
பிரான்ஸ் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மரீன் லீ பென்னுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Link: https://namathulk.com