யாழ் பல்கலை பகிடிவதை : தீவிரமாகும் விசாரணைகள்

Aarani Editor
1 Min Read
UOJ

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

பகிடிவதை செய்வதானது இலங்கையின் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகவும், பிணை வழங்கப்படாத குற்றமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

பகிடிவதை செய்யும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும் பிடியாணை இல்லாமல் கைது செய்யப்படலாம் எனவும் சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

எனவே யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மேற்குறித்த பகிடிவதை சம்பவம் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து அது தொடர்பிலான அறிக்கையினை எதிர்வரும் 04.04.2025 இற்கு முன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்துக்கு அனுப்பிவைக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடியதாக பீடாதிபதி கூறியுள்ளார்.

துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *