இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்திருந்தது.
இதன்போது, 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது.
அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் பொண்டுள்ளதாக குழு கூறியது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியது.
எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் பிறிதொரு மட்டுப்படுத்தல் எனவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கூறியது.
எனவேஇ வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புவதாகவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடியை வரவேற்பதாகவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது.
Link: https://namathulk.com