வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகிய காரணங்களால், சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
இதன்போது, ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தமது கள நிலைமை ஆய்வு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.
1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை மக்களுக்குச் செய்து வருவதாக ஆளுநர் கூறினார்.
வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்தாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
பொருளாதாரப் பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை இதற்கு காரணமாக இருந்தாலும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன், சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்னார்.
Link: https://namathulk.com