அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இத்திட்டத்தின் மூலமாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன எமது அபிவிருத்திக்கு தடையாகவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் அதற்கான புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை புனரமைத்து மீளமைப்பதுடன் அதனை காங்கேசன்துறை துறைமுகம் வரையில் விரிவாக்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
பரந்தனுக்கு அண்மையாக புகையிரத நிலையம், ஏ – 9 பிரதான வீதி உள்ளமை சாதகமாக அம்சம் என சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், சில இடங்களில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.
மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்துக்குரியது என்பதால் அதனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், மூன்று முதலீட்டு வலயங்களைச் சுற்றியும் வேலிகளை அமைத்து அதனை அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் சுற்றுச்சூழல் நேயமிக்கதாக அமையும் என முதலீட்டுச் சபையினர் குறிப்பிட்டனர்.
Link: https://namathulk.com