ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ என எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயத்திற்கு இணைந்ததாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய அரசாங்கத்தின் சார்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
Link: https://namathulk.com