இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா தற்போது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (04) இலங்கையை வந்தடைந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ எனம் எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.
அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியை தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.
Link: https://namathulk.com