புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடிஅமைக்க முயற்சி – தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி

Aarani Editor
1 Min Read
Illegal Fishing

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டார்.

இதன்போது, உரிய தரப்பினரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடி தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் அத்துமீறி அமைக்கப்பட்ட வாடிகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக, தமிழ் மீனவர்கள் பன்நெடுங்காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், கடந்தவருடமும் அத்துமீறி குறித்த பகுதியில் வாடி அமைப்பதற்கு சில பெரும்பான்மையின மீனவர்கள் முயற்சி மேற்கொண்டிருப்தனர்.

இந்த நிலையில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இத்தகைய சூழலில் மீளவும், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையை சேர்ந்த சில பெரும்பான்மையின மீனவர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்துள்ளனர்.

அத்தோடு புலிபாய்ந்தகல் பகுதியில் பூர்வீகமாக மீன்பிடியில் ஈடுபடும் சில தமிழ் மீனவர்களின் வாடிகளை அடாவடித்தனமாக அகற்றியே இவ்வாறு தென்னிலங்கை பெரும்பான்மையின மீனவர்களால் வாடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை OFRP-A-5491 CHW என்னும் இலக்கமுடைய மீன்பிடிப் படகொன்றும் அனுமதி பெறப்படாமல் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *