தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதில் அரசு அசமந்தம் – பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு.

Aarani Editor
1 Min Read
பொ. ஐங்கரநேசன்

இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ஒன்றாக உள்ளது. ஆனால்இ வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரையில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் அசமந்தமாக உள்ளது எனவும் பொ. ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்னை மரங்களில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வெள்ளை ஈக்களின் தாக்கம் தேங்காய் உற்பத்தியைப் பாதித்து வருவது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களின் உணவிலும் பண்பாட்டிலும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்ற தேங்காய்கள் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்குக் கணிசமான அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்பத்தியாகும் தேங்காய்கள் மூன்றில் இரண்டு பங்கு உள்ளூரில் நுகரப்பட, மூன்றில் ஒருபாகம் உலர்ந்த தேங்காய்த் துருவல்களாகவும், தேங்காய் எண்ணையாகவும் மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

இவற்றுக்கென ஆண்டுக்கு 4 பில்லியன் தேங்காய்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 3 பில்லியன் தேங்காய்கள் வரையிலேயே அறுவடை செய்யப்படுவதாகத் தெங்கு அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தென்னையுடன் தொடர்புபட்ட இன்னுமொரு அமைப்பான தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த 2026ஆம் ஆண்டில் சுமார் நூறு மில்லியன் தேங்காய்களுக்குப் பற்றாக்குறைவு ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது.

பற்றாக்குறைகளை ஈடுசெய்வதற்காகத் தேங்காய்ப்பால் உலர்ந்த தேங்காய்த் தூள், குளிர்ந்த தேங்காய்க்கூழ் ஆகியவனவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதனால், மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாக குறித்த அறிக்கையில் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

க்ளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுத்து வரும் அரசாங்கம் குப்பை கூழங்களையும் சுவரொட்டிகளையும் அகற்றுவதோடு நிற்காமல் வெள்ளை ஈக்களை அகற்றித் தென்னையைச் சுத்தம் செய்வதையும், அத்திட்டத்தில் உள்வாங்கவேண்டும் எனவும் பொ. ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார்.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *