மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் நேற்று மன்னார் உயிலங்குளத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர், வதிவிட முகாமையாளர், விவசாய விரிவாக்கல் பணிப்பாளர், கட்டுக்கரை குளத்தின் திட்டமிட்ட விவசாய அமைப்பு, கமநல சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இவ்வருடம் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்தை உள்ளடக்கியதாக 31 ஆயிரத்து 275 ஏக்கர் நிலத்திற்கு 10 இற்கு 1 என்ற அடிப்படையில் 3,349 ஏக்கர் என்ற அளவில் சிறுபோக பயிர்ச் செய்கைக்கு அனுமதிப்பது என குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கரை குளத்தின் நீர் அளவு 30 ஆயிரத்து 982 அடி நீர் காணப்படுகின்ற அதேவேளை, 3 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் அதி உச்ச அளவாக சிறுபோக செய்கையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, வாய்க்கால் துப்புரவு மற்றும் பராமரிப்பு போன்றவை மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், முதல் நீர் விநியோகம் மே மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கவும், விதைப்பை மே மாதம் 25ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலதிகமாக மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை அடாத்து பயிர்ச்செய்கையாக கருதி கடந்த வருடம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது போல, இம்முறையும் சட்ட நடைமுறைக்கு உட்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், அடாத்து பயிர்ச் செய்கையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபா தண்டம் அறவிடப்படும்.
Link: https://namathulk.com/