வட.மாகாண ஆளுநர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு.

Aarani Editor
2 Min Read
NorthernProvinceGovernor

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டச் செயலராக வடக்கின் 4 மாவட்டங்களிலும் பணியாற்றிய காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பல திட்டங்களுடன் இணைந்து பணியாற்றியமையை நினைவுகூர்ந்ததுடன் வடக்கு மாகாண மக்களுக்கான உதவிகளுக்கு ஆளுநர் நன்றிகளையும் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக முதலீட்டு வலயங்களை வடக்கில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவற்றுக்கும் குடிநீர் தேவை என்பதால், அதையும் கருத்திலெடுக்க வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தீவகப் பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும்போது அங்கும் குடிநீருக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் எனவும் அதனை நிவர்த்திக்கும் வகையில் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாடுகளை அங்கு அதிகரிக்க வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதனால் சுற்றுலாத்துறைக்கு பின்னடைவு இருக்கின்றது எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கைக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு செய்யப்படவுள்ளதைக் குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தமது உறவுகள் – திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்றடைவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினர் குறிப்பிட்டனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *