முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டு படகுடன் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பு மற்றும் நந்திக்கடல் களப்பு உள்ளிட்ட களப்புக்களில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மிக தீவிரமாக சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துவதற்கான அணி ஒன்று செயற்பட்டு வருகின்றது
அந்த வகையில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர் ஆகியோர் இணைந்து அண்மைய நாட்களாக மிக தீவிரமாக சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அந்தவகையில் இன்றையதினம் அதிகாலை கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகள் மற்றும் வலைகளும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தது. அத்தோடு ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 16-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை, நேற்று மற்றும் நேற்று முன்தினம், இவ்வாறு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
link: https://namathulk.com/