அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10 சதவீதம் வரி அமுலில் இருக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரியை மார்ச் மாத ஆரம்பத்தில் 20 சதவீதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்திருந்தார்.
அதன்பின், பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை விதித்தார்.
இதன்மூலம் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார்.
இதன்மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது.
இந்த வரிவிதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இதனால். உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
link: https://namathulk.com/