மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை.

Aarani Editor
2 Min Read
HealthOfficerRaid

மன்னார்-பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக நேற்று மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உப்புக்குளம்-பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த இரு உணவகங்களுக்கும், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் குறித்த குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த உணவகத்தில் கடமையாற்றியவர்கள் சுகாதார பரிசோதனை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமல் கடமையாற்றியமை, குளிர்சாதனப் பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரித்து வைத்தமை, உணவுப் பொருட்களை சுகாதாரம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் தயாரித்தமை உள்ளிட்ட சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டதோடு, உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள மேலும் ஒரு உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த உணவகத்தில் பல்வேறு பிரச்சினைகள் சுகாதார அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த உணவகத்தை உடனடியாக தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதோடு குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர் வரும் பண்டிகைக்காலங்களையோட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள உணவகங்களில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சுகாதார முறையில் உணவுப் பொருட்களை கையாளும் உணவகங்களில் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை கையாளும் உணவகங்கள் தொடர்பாக முறையிடுமாறும் சுகாதார துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *