‘GovPay’ விண்ணப்பத்தின் மூலம் அபராதம் செலுத்த ஒன்லைன் உடனடி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குற்றப்பத்திரங்களை பொலிசாரால் வழங்க முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார்.
குற்றப்பத்திரங்களை பெறுபவர்கள் உடனடியாக தமது வங்கி அட்டைகள் ஊடாக அபராதங்களைச் செலுத்த புதிய முறை உதவும் என அவர் கூறினார்.
புதிய முறை பல குற்றங்களுக்கு உடனடியாக அபராதம் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதால், ஒரு வாகன சாரதி ஒன்றுக்கு மேற்பட்ட விதிமீறல்களைச் செய்தால், பொலிசார் அதிக குற்றப்பத்திரங்களை ஒரே தடவையில் வழங்க முடியும் என ஹர்ஷா புரசிங்க குறிப்பிட்டார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமாக, போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராதங்களை ‘GovPay’ விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் உடனடியாக செலுத்தும் முறை இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/