பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி.

Aarani Editor
1 Min Read
NewYear Wishes

வளமான நாடு, அழகான வாழ்க்கைக்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.

ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்கிறது.

எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும், நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு, இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரிய பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.

அண்மைய வரலாற்றில், நாட்டில் எற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம்.

இருப்பினும், ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் ஒரு புதிய ஆரம்பத்திற்கு வழி வகுத்துள்ளன.

அதனால்தான் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு முக்கிய மைற்கல்லைக் குறித்து நிற்கிறது.

இது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து சமூகங்களும் சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகக் கொள்கைகளின் கீழ் ஒன்றிணைந்துள்ள ஆண்டாகும்.

எதிர்வரும் மே மாதத்தில் அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை.

புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத்தருணத்தில், அனைத்து பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

மலரும் இந்த சிங்கள தமிழ் புத்தாண்டில் இலங்கை தேசத்திற்கு புதியதோர் மாற்றமும் வளமான எதிர்காலமும் அமைய புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கையர்களுக்கும் வலிமையும் ஐக்கியமும் புத்தெழுச்சியும் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *