பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் அரை மணி நேரம் கலந்துரையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாக உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதன்போது, தாம் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் வேதனையான வாழ்க்கை குறித்து விளக்கியதாகவும் சில சமயங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் உதய கம்மன்பில கூறினார்.
அத்துடன் கடத்தல் விவகாரம் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்ட போதிலும் தற்போது ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பம் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிள்ளையான் தன்னிடம் கூறியதாக உதய கம்மன்பில கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/