மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.
அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு அனைத்து கூரை சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களிடமும் மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயத்தை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இம்மாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை அனல் மின் உற்பத்தி நிலையங்கள் பயன்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக்காலத்தில் மின்சார தேவை குறைவாக இருந்தமையை கருத்திற் கொண்டு சகல சூரிய மின்சக்தி படலங்களையும் செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.
இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/