35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதற்கு அமைய உடனடியாக காணிகளை விடுவிக்குமாறு வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் கோரிக்கை விடுக்கிறது.
இந்த விடயம் தொடர்பில் வலி வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையமானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.
யுத்தம் முடிந்து 15 ஆண்டு காலம் முடிவடைந்தும் ஐந்தாவது ஜனாதிபதி மாற்றமாகியும் நாலாவது பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டும் பல வாக்குறுதிகள் வழங்கியும் இதுவரை சுமார் 2,900 ஏக்கர் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என குறித்த கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டள்ளது.
கடந்த 10ஆம் திகதி பலாலி வீதியின் ஒரு பகுதி நிபந்தனைகளுடன் பகல் நேரத்தில் மட்டும் திறந்து வைக்கப்பட்டதை வரவேற்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டள்ளது.
அதேநேரம், 2018ம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குழுவின் அனுமதி பெறப்பட்ட காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி போன்ற கிராமங்களில் விடுவிக்கப்படவிருந்த சுமார் 500 ஏக்கர் காணிகளில் 50 ஏக்கர் காணிகள் மட்டுமே இதுவரை மக்களின் தேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த காணிகளை மக்கள் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் இராணுவ கெடுபிடிகள் தொடர்ந்தும் நீடிப்பதாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் நடப்பதற்கு முன் அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலையத்தில் இருக்கும், மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், குறித்த அமையம் பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
- வலி வடக்கில் முப்படையினரதும் உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
- 1983 ஆம் ஆண்டு முதல் விமான நிலைய விஸ்தரிப்புக்கென கையகப்படுத்தப்பட்டும் இதுவரை எந்த வித பயன்பாடோ அபிவிருத்தியோ செய்யப்படாத காணிகள் உடனடியாக உரிமையாளரிடம் கையளிக்க வேண்டும்.
- ஜனாதிபதி மாளிகை மற்றும் தையிட்டி விகாரை போன்ற காணிகள் தொடர்பாக விசேட அவதானம் எடுத்து நீதியான முறையில் உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக காணிகள் மீளளிப்பதற்கான வெளிப்படையான தீர்வொன்றை முன்வைக்க வேண்டும்.
- தற்போது அரசின் அமைப்புகளால் கையகப்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தப்படும் அனைத்துகாணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய முழுமையான வெளிப்படையான அறிக்கை ஒன்றை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும்.
- விடுவிக்கப்பட்ட காணிகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதில் உள்ள சவால்களை நீதியானதும் மனிதாபிமான முறையில் கையாண்டு காணிகளை பாதுகாப்பதற்கும் எல்லைகளை நிர்ணயிப்பதற்கும் குறைந்ததது வேலி போட்டு மின்சார இணைப்புக்களை பெற அரச நிதி ஒதுக்கீடு செய்து 2025 தொடக்கம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
- காணிகளை விடுவிப்பதுடன் குறைந்தது வீடுகளை மீளக் கட்ட அல்லது புனரமைக்க திட்டமிடல் செய்து வருடாந்தம் இதற்கான நிதியினை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
- 1981ம் ஆண்டு வடக்கு மக்களுக்காக கட்டப்பட்டு 2017 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மயிலிட்டி உட்பட வடபகுதி மீனவர்களின் தேவைக்கு பயன்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- கையகப்படுத்தப்பட்ட இந்திய இழுவைப்படகுகள் மற்றும் தென்பகுதியிலிருந்து வரும் பெரிய மீன்பிடி படகுகள் குறைக்கப்பட்டு உள்ளுர் மீனவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
- மயிலிட்டி துறைமுகம் மயிலிட்டி மீனவர் சங்கத்தின் பராமரிப்பிற்கு வழங்கப்படவேண்டும்.
- காங்கேசன்துறை கீரிமலை வீதி மற்றும் கட்டுவன் வசாவிளான் வீதி உற்பட மூடப்பட்டுள்ள அனைத்து வீதிகளும் உடன் திறப்பதுடன் அந்த வீதிகள் ஊடாக பொதுமக்கள் பிரயாணம் செய்வதற்கான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- நல்லிணக்க அடிப்படையில் தமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அழித்து சேதமாக்கப்பட்ட அனைத்து சமய ஆலயங்கள் மற்றும் கோவில்களை விடுவித்து அரச செலவில் மீள் புனரமைப்பு செய்வதை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
Link: https://namathulk.com/
