பாதுகாப்பு எனும் போர்வைக்குள் மக்களின் காணிகளை கைவசம் வைத்திருக்க எந்தவொரு அரசாங்கத்திற்கும் உரிமை இல்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெற்றி நமதே ஊர் எமதே மக்கள் பேரணி தொடரின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி பெரும் உணர்ச்சிப்பூர்வமாக தனது கருத்துக்களை முன்வைத்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்ட போதிலும், அவை தற்போத விடுவிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில், ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையை அண்மித்த வீதிகள் பொதுமக்கள் பாவனைக்காக தற்போது திறக்கப்பட்டுளளன.
இந்நிலையில், வடக்கிலும் மூடப்பட்டிருக்க கூடிய பொது வீதிகள் கட்டம் கட்டமாக திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
விடுவிக்கப்பட கூடிய அனைத்து காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும், அவற்றில் சுதந்திரமாக குடியேறவும், விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு யுத்தம் நடைபெற கூடாது என்பதை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் தேடி ஆராய்ந்து உங்களிடம் உண்மையை தெரிவிப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளாந்தம், அனுபவிக்கும் வேதனைகளை நன்கு அறிந்தவன் என்ற வகையில் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.




Link: https://namathulk.com