இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரியினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகளை இலங்கை முதலீட்டு சபை மேற்கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்துள்ள முக்கிய 50 ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பொன்றை அந்தச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார்.
அவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திறந்த உரையாடலில் பல பொருளாதார நிபுணர்கள் உட்பட வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் ஆலோசகர் நேர்மறையான முடிவுகளை அடைவதற்கும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் இதுவரை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.
இராஜதந்திர மட்ட விவாதங்கள் ஏற்கனவே நடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வொஷிங்டனில் நிலைகொண்டுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் வெள்ளை மாளிகையின் வர்த்தகத் துறையில் உள்ள பிரதிநிதிகளுடன் ஏற்கனவே தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, மேலும் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகச் சொல்லப்பட்ட வரிக் கட்டணங்கள் குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறச் சுமார் 70 நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கான இலங்கை வர்த்தகர்களில் 200 பேர் வரையிலானவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் தொடர்பைக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வருடத்தில் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மொத்தமாக 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
அதேபோல இலங்கைக்கான ஏற்றுமதிகள் 368.2 மில்லியன் அமெரிக்க டொலராகவும் இருந்தது.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் போட்டியிடும் நாடுகளின் மாறுபட்ட கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் அவற்றின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/