எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்..
கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு, மாளிகாவத்தை பிரிவில் இன்று பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, நம் மீது குறை கூறும் யாரும் இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பண விரயம் பற்றிப் பேசுவதில்லை எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
நிதிகளை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக உழைப்பதாகவும் பிரதமர் சுடடிக்காட்டினார்.
அத்துடன், திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, கீழ்மட்டத்தில் உள்ள தலைமையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், முன்னைய அரசாங்கங்களால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதும், தவறுகளைச் சரிசெய்வதும்தான் அரவாங்கத்தின் முதன்மை பணி எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டை ஊழல் அரசியலிலிருந்து விடுவிப்பதற்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com/