தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தனது மகனை பார்ப்பதற்காக சென்றவேளை பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜெகதீஸ்வரன் சற்குணதேவி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்தநிலையில், இன்று (22) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மருதங்கேணி பொலிஸாரால் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அவர் கூட்டத்திற்கு செல்லவில்லை.
இதனையடுத்து, இன்றையதினம் அவரது வீட்டிற்கு வந்த பொலிஸார் அவர் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை என்று கேட்டனர்.
அதற்கு நான் இனி வேட்பாளர் இல்லை என்று சற்குணதேவி கூறியபோது, கலந்து கொள்ளச் சொன்னால் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பொலிஸார் அவரைத் திட்டியுள்ளனர்.
இதனையடுத்து, எந்த காரணமும் கூறாமல் உடல்நிலை சரியில்லாத அவரது மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சற்குணதேவி தனது வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயற்பாட்டிற்காக மருதங்கேணி பொலிஸாரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றார்.
மேலும், பொலிஸாரால் அவரது கணவர், மகன் மற்றும் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






Link: https://namathulk.com/