வவுனியா இரட்டை கொலை விவகாரம் – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை.

Aarani Editor
2 Min Read
Double Murder

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாஸ் உத்தரவிட்டார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதற்கமைவாக இன்று குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஒன்பதாம் இலக்க சந்தேக நபர்கள் 5 பேருக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணை அதிலும் ஒரு பிணையாளி மனுதரராக இருக்க வேண்டும் என்பதுடன், இரு பிணையாளிகளும் கிராம அலுவலர் மூலம் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நிபந்தனை வழங்கப்பட்டது.

அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணிக்கு இடையில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தமது வரவை பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் வவுனியா நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கும் படியும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *