GSP+ மீளாய்வை சாதகமாகப் பார்ப்பதாகக் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (30) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சார்லஸ் வைட்லி இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு பல வணிக சாதனைகளை அடைய உதவியுள்ளது என்றும், மேலும் வணிக சாதனைகளை அடைவதில் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சார்லஸ் வைட்லி கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகைகள் இலங்கை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை வழங்குவதற்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய தலைவர் சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையை வழங்குவதில் கருத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
GSP+ வரிச் சலுகை அல்லது பொதுவான விருப்பத்தேர்வு முறை தொடர்பான 27 சர்வதேச ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் அமைப்பும் , அன்றைய ஆட்சியாளர்களின் வீண் செலவும், ஊழலும் தான் காரணம் என கூறிய ஜனாதிபதி , நாடு சரியான நிர்வாகத்தைக் கொண்ட நாடாக மாற்றப்பட்டு வருவதாகவும், இதற்கு சிறிது காலம் தேவை எனவும் கூறியுள்ளார்.
முழு குடிமக்களின் எதிர்பார்ப்புகளும் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில் தமிழ் மக்களும், கிழக்கில் முஸ்லிம் மக்களும், தெற்கில் சிங்கள மக்களும் இந்த முறை தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு பங்களித்ததை நினைவு கூர்ந்தார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தனது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com/
