நுவரெலியா – கம்பளை பிரதான வீதியிலுள்ள கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இன்று காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப கடிதத்திலேயே இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறபப்ட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதில் தற்போது விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இதற்காக ஒரு செயற்திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று காலை நடந்த இந்த கொடூரமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து தொடர்புடைய வைத்தியசாலைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com/
