மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான பெல் 212 உலங்குவானூர்தியின் சிதைவுகளை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட சிதைவுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான உலங்குவானூர்தியின் பாகங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டன.
கடற்படையின் சுழியோடல் பிரிவு மற்றும் கடலோர காவல்படையின் எண்ணெய் கசிவு மீட்புக் குழுக்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
விபத்து குறித்து விசாரிப்பதற்காக விமானப்படைத் தளபதியால் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது பேர் கொண்ட குழு நேற்றைய தினம் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு விமானப்படை சிப்பாய்களும், நான்கு இராணுவ விசேட அதிரடிப்படை சிப்பாய்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த படையினரின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதுடன், குறித்த அறுவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தமை தெரியவந்தது.
Link: https://namathulk.com/
