ஒரு தேசத்தின் மக்கள் மேல் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக வடக்கு கிழக்கு எங்கிலும் நினைவுக்கூறப்படுகின்றது.
தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்களின் ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் கொத்துக்கொத்தாய் வீழ்ந்து வெடித்திட கொதிக்கும் குருதியில் உடல் சிதறிய பிணங்களும், விழுப்புண்ணடைந்த மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது.
உண்ண உணவின்றி தவித்த மக்களுக்கு போராளிகளும் தொண்டு நிறுவனங்களும் வன்னி பெருநிலப்பரப்பில் பட்டினிச் சாவுகளை கட்டுப்படுத்தி உயிர் பிழைத்திட வைத்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வாழ்வை மீள்நினைவுபடுத்தும்.
இன அழிப்பின் உச்சம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் இன அழிப்பு யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
எமது உறவுகளின் உயிர்காத்த நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்ட கஞ்சியே- முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும்.
சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் கஞ்சியினைப்பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த காத்திருப்பின்போதுகூட பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன.
காத்திருந்து காத்திருந்து கையில் வாங்கிய கஞ்சியை, ஒரு மிடறு பருகி வயிற்றில் தாங்கிய சிசுவின் பசியாற்றுவதற்கு முன்பே வயிறு கிழிந்து, இரத்தம் பீறிட குடலும் கருவும் வெளிச்சிதறி மாண்டுபோன பேரவலங்கள் முள்ளிவாய்க்காளில் நிகழ்ந்தன.
அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர்.
பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள், குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள்.
பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினார்கள்.
முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி, பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு.
இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும்.
மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும் உலகத்தமிழினம் நினைவு கூருவது சாலத் தகுந்தது.
மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, அஞ்சலி செலுத்துவது மட்டுமல்லாமல் ‘கஞ்சி’ எல்லோர் வீடுகளிலும் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த வலிநிறைந்த நாட்களின் நினைவுகளை மீள் நினைவுட்டி அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க, நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக்கடமையாகும்.
உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும்.
Link: https://namathulk.com/
