தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா – ரவிகரன் எம்.பி காட்டம்.

Aarani Editor
2 Min Read

குருந்தூர்மலை அடிவாரத்தில் தமது பூர்வீக விவசாய நிலங்களில் பயிற்செய்கை மேற்கொள்ளும்நோக்கில் கடந்த 10ஆம் திகதி விவசாயிகள் மூவர் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டபோது, தொல்லியல் பகுதிக்குள் பண்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பௌத்த பிக்குகள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே பொலிசார் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த நிலங்கள் முழுவதும் தமிழ் மக்களின் நிலங்கள் எனக்குறிப்பிட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தொல்லியல் பகுதிக்குள் குறித்த விவசாயிகளால் பண்படுத்தல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால்கூட, அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடு செய்திருக்கவேண்டும்மெனவும், இது தொடர்பில் பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்வார்களானால் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளது கூடாரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு இனவாதத்தைத் தூண்டுகின்றவகையில் செயற்படுகின்ற இவ்வாறான பௌத்த பிக்குகளுக்கெதாராக தற்போதைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் துரைராசா ரவிகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

குருந்தூர்மலைப் பகுதியில் தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் பௌத்த பிக்குகளின் அடாவடித்தனமான இனவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாய நிலங்களில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 10ஆம் திகதி மூன்று தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் 11ஆம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் விவசாயக்காணிகள் பூர்வீகமாக தமிழ்மக்கள் விவசாயம் செய்துவந்த காணிகளாகும்.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்களையிட்டு அபகரித்துவைத்துள்ளனர்.

குறித்த விவசாயநிலங்களில் கடந்த வருடம்கூட விவசாயிகளால் பயீற்செய்கைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந் நிலையில் இவ்வருடமும் குறித்த வயற்காணிகளில் விவசாயம் செய்யும்நோக்கில் பண்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட விவசாயிகளே இவ்வாறு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச்சென்று இவ்வாறு கைதுசெய்யப்பட்ட விவசாயிகளைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதுடன், எமது விவசாயிகளது சுதந்திரமான தொழில்செய்யும் உரிமை மறுக்கப்படுவதுதொடர்பில் எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தேன்.

பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமையவே இவ்வாறு பொலிசாரால் எமது விவசாயிகள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எமது தமிழ் மக்கள் காலங்காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்த தமிழ்மக்களது பூர்வீக விவசாய நிலங்களில் தொல்லியல் திணைக்களம் அத்துமீறியே எல்லைக்கற்களையிட்டுள்ளது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி இடப்பட்ட பகுதிக்குள் பண்படுத்தல் இடப்பட்டிருந்தால் அதுதொடர்பில் தொல்லியல் திணைக்களமே முறைப்பாடுசெய்திருக்கவேண்டும். ஆனால் அதுதொடர்பில் பௌத்த பிக்குகளே முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு பௌத்த பிக்குகள் முறைப்பாடுசெய்து பொலிசார் கைதுசெய்வதெனில், தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா எனக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

இங்கு தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளைப் பறித்ததோடு மாத்திரமின்றி, அக்காணிகளுக்குரிய தமிழ் மக்கள், வாழ்வாதாரத்திற்காக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றபோது பௌத்த பிக்குகளின் முறைப்பாட்டிற்கமைய பொலிசார் கைதுசெய்யப்படுகின்ற அவலமும் அரங்கேறுகின்றது.

இந்தவிடயத்தில் உரியவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறாக இனவாதத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கெதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும்.

ஏனெனில், இனவாதத்தை எவரும் வெளிப்படுத்தக்கூடாது, அனைத்து இன மக்களையும் சேர்த்துக்கொண்டு பயணிப்போமென்று கூறிக்கொண்டு ஆட்சிசெய்துகொண்டிருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கவனமெடுக்கவேண்டும்.

இவ்வாறான இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *