கனடாவில் நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – கனடிய உயர்ஸ்தானிகருக்கு விஜித ஹேரத் கண்டனம்.

Aarani Editor
1 Min Read
Vijitha Herath

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து, ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *