க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்காக சுகாதார பாதுகாப்பு வசதிகள்.

Aarani Editor
1 Min Read
Clean Sri Lanka

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி, க்ளீன் சிறிலங்கா ஜனாதிபதி செயலணி, வலுசக்தி அமைச்சு மற்றும் நாட்டின் நான்கு பிரதான எரிபொருள் விநியோகத்தர்களான, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா IOC PLC (LIOC), சினொபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் மற்றும் RM பார்க்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் பலவீனமானவர்கள் இலகுவாக அணுகக் கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இடங்களாக மாற்றும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி மூன்று வருட காலத்திற்குள் பொதுமக்களுக்காக நவீன சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 540 இடங்களை அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் 100 இடங்களை 2025 ஆம் ஆண்டுக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், நிலையான பொதுச் சேவையை வழங்குவதற்கான இயலுமை கிட்டும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இந்நாட்டுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த உதாரணம் எனவும், எதிர்காலத்தில் முன்னணி வர்த்தக நிலையங்கள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தினை ​மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

இது வெறுமனே ஒப்பந்தமாக மாத்திரமின்றி பெருமிதமான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிகுந்த இலங்கைக்கான உறுதிப்பாடாக அமையும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *