பெண்களுக்கான தொழிற்சூழலை பாதுகாப்பான இடமாக மாற்றுவது அவசியம் – பிரதமர்

Aarani Editor
2 Min Read
பிரதமர்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி – கரலிய மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

‘எமது தாதியர் எமது எதிர்காலம் – தாதியர்களைப் பாதுகாப்பது பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது” என்ற கருப்பொருளின் கீழ் இவ்வருட சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தாதியர் தொழில் தொடர்பாக எழுதப்பட்ட “ஹெதகம” சஞ்சிகையை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்

தாதியர்களாக நீங்கள் சுமந்திருக்கும் பொறுப்பு மற்றும் உங்கள் சேவையைப் பற்றி சிந்திக்க இன்று நம் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்மையில் கரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட போக்குவரத்து அமைச்சரும் நானும் கம்பளை மருத்துவமனை மற்றும் பேராதனை மருத்துவமனைக்குச் சென்றோம்.

நான் ஒரு மருத்துவமனைக்குச் செல்வது இது தான் முதல் முறை இல்லை என்றாலும், ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும், எங்கள் தாதியர்கள் வழங்கும் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பார்த்து நான் வியப்படைகிறேன்.

எனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தாதியர்களின் அர்ப்பணிப்பை நான் நேரில் கண்டேன்.

கம்பளை மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் உள்ள அந்த தாதியர் சகோதர சகோதரிகளிடம் நான் உரையாடினேன்.

தாதியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எனக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தன.

தாதியர் தொழிலில் 95 சதவீதம் பேர் பெண்கள்.

இது பெண்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்று என்றோ அல்லது பெண்கள் மட்டுமே செய்யும் ஒனறு என்றோ நான் நினைக்கவில்லை.
நூற்றுக்கு 95 சதவிகிதத்தினர் எப்படிப் பெண்களாக மாறினர் என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

பெண்களாகிய எமக்கு இயற்கையான திறமை ஏதாவது இருக்கிறதா என்றும் நான் சிந்தித்தேன்.

அத்துடன் தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *