இலங்கையில் தற்போது அமுலில் காணப்படும் 1980ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல தயாரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்துதன் ஊடாக பூகோள பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்நோக்குதல் உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தர நிர்ணயங்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள் ஆலோசணைகள் மற்றும் பரிந்துரைகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு எதிர்பார்க்கிறது.
அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை நீதி அமைச்சிற்கு சமர்ப்பிக்க முடியும்.
தபால் மூலம் கருத்துகளை அனுப்ப விரும்புவோர் “பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பான பரிந்துரைகள்” என தலைப்பிட்டு செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, இல.19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும்.
Link: https://namathulk.com/
