முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் – CEB விசேட அறிக்கை.

Aarani Editor
2 Min Read
CEB விசேட அறிக்கை

முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்திற்கு அமைய கட்டணம் அதிகரித்தாலும், அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விடக் குறைவாகவே இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னணியில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மின்சார சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்மொழியப்பட்ட புதிய திருத்தத்தின்படி புதிய மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மின்சாரக் கட்டணத்தை விட இது குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-2022 காலகட்டத்தில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கான செலவுகள் அதிகரித்த போதிலும், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அந்தக் காலகட்டத்தில் எரிபொருள் விலைகள், நிலக்கரி, உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளும் தொடர்ந்து அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்த செலவுகளின் முழுச் சுமையும் இப்போது கடன் நெருக்கடியாக அதிகரித்துள்ளதால், சபை பெரிய அளவிலான கடன்களை எடுத்து விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்துவதை ஒத்திவைக்க வேண்டியுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம், அத்தியாவசிய செலவுகளை படிப்படியாக ஈடுகட்டுதல், கடன் நெருக்கடியை நிர்வகித்தல் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர்கால வலுசக்தி பாதுகாப்பை பாதிக்காமல், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க உதவுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதும், குறைந்த விலை வலுசக்தியை அறிமுகப்படுத்தி, நீண்டகால சீர்திருத்தங்கள் மூலம் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் செலவுகளைக் குறைப்பதன் மூலம் எரிசக்தித் துறையை வலுப்படுத்துவதே இலங்கை மின்சார சபையின் நோக்கம் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *