வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமாணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்பித்துள்ளார்.
குறித்த பிரேரணையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
28.03.2025 திகதியிடப்பட்ட 2430/2025 எண் கொண்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான 5, 000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஏழு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்புகள் கடற்கரைகள் – ஏரிகள் – வண்டிப் பாதைகள் மற்றும் மயானங்கள் உள்ளிட்ட நிலங்களை கையகப்படுத்தி – தமிழ் மக்களால் பூர்வீகமாக பயன்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களைக் கொண்ட நிலங்களை – அரசு கையகப்படுத்த முயற்சிக்கின்றது.
இலங்கை அரசு நிலத்தை அந்நியப்படுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாகமே, சுயநிர்ணயத்திற்கான தமிழர் போராட்டமும் உருவானது.
இதன் மூலம் இலங்கை அரசு தமிழர்களை தங்கள் சொந்த தாயகத்தில் சிறுபான்மையினராக மாற்றுவதற்கு அரசு தொடர்ந்தும் முயற்சிக்கிறது.
வடக்கு கிழக்கில் உள்ள நிலத்தின் மீது தங்கள் தன்னாட்சி கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட வர்த்தமானி அறிவிப்பு, இலங்கை அரசாங்கங்களால் தமிழர்களின் தாயகத்தைப் பறிக்கும் நீண்ட வரலாற்றில் மற்றொரு தொடர்ச்சியான முயற்சியாகும்.
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள நிலங்கள் தமிழ் மக்களால் பூர்வீகமாக பயன்படுத்தப்பட்ட நிலங்களையும் பொதுச் சொத்துக்களையும் உள்ளடக்கியது என்பது எங்கள் புரிதல்.
சுனாமி அனர்த்தத்தின்போதும், தொடர் இடப்பெயர்வுகளாலும் ஆவணங்கள் இழக்கப்பட்டுள்ள நிலையில், காணி உரிமையாளர்கள் அவற்றை நிறுவுவதில் சிரமப்படுகிறார்கள்.
இந்த அரசாங்கம் 2024 ஜனாதிபதித் தேர்தலின் போதும், 2025 பொதுத் தேர்தலின்போதும், தனது தேர்தல் அறிக்கைகளில், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வை உண்மையிலேயே ஆராய்வதாக அரசாங்கம் உறுதியளித்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்துள் நிலத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு தீர்வை வழங்குவதும் உள்ளடங்கும்.
இருப்பினும், அரசின் இந்த வர்த்தமானி அறிவிப்பு, அரசு நிலத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முந்தைய அரசாங்கங்களின் கருத்துக்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தமிழ் தேசத்தின் மற்றொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலைச் செயலாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இந்த வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறித்த அறிக்கையின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
link: https://namathulk.com/
