முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – காலப் பெறுமதி மிக்க செயல் : கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

Aarani Editor
1 Min Read
முள்ளிவாய்க்கால்

கனடாவின் பிரம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட சிவஞானம் சிறீதரன், கனேடியத் தூதுவரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் பிரம்டன் நகரில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில்; திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும்; கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால்,

ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

ஈழத்தமிழர்கள் மீதான நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *