இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் இந்தியா தர்ம சத்திரம் அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழரான சுபாஷ்கரன் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் தொடர்ந்து தங்க உங்களுக்கு உரிமை இல்லை. இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்கு சென்று புகலிடம் கோருங்கள்’ என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்குரியது.
இலங்கை தமிழ் அகதிகளில் திரும்பி செல்ல விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் இங்கு வாழ்கின்றனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள், அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள்.
நீதிபதிகள் இதுபோன்ற கருத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
