கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கனிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதப் பிரதிவாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், பிணைக்காக முன்னிலையாகும் இருவர் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், சாட்சிகளிடம் அழுத்தம் பிரயோகிப்பதை தவிர்க்கவும், விசாரணைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
Link: https://namathulk.com/
