அநுர அரசாங்கம் இதுவரை செய்த அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் பதவியேற்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2.3 மில்லியன் வாக்குகளை இழந்தமை மூலம் அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகி உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொதுவாக ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுபோன்ற தேர்தல்கள் நடத்தப்படும் போது, அதிகாரத்தில் இருக்கும் ஆளும் கட்சி அதிக வாக்குகளை பெறும்.
ஆனால் இந்த முறை, வேறு ஏதோ நடந்த விட்டது.
இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் மீண்டும் ஒரு ஆணையை வழங்குமாறு கேட்டனர்.
அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட ஆணையை உறுதிப்படுத்துமாறு மக்களிடம் கேட்கப்பட்டது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பெறப்பட்ட 6.8 மில்லியன் வாக்குகளின் எண்ணிக்கை 4.5 மில்லியனாக குறைந்தது.
அதாவது 2.3 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.
இதன்மூலம் சமகால அரசாங்கம் முதன்முறையாக பாரிய தோல்வியை சந்தித்துள்ளது.
பொதுவாக, ஒரு ஆணையைக் கோரினால், அது வழங்கப்பட வேண்டும். அது வழங்கப்படாவிட்டால், அது பாரிய பின்னடைவாகும்.
அரசாங்கம் இதுவரை செய்தவற்றில் மக்கள் திருப்தி அடையவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
