இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான முதியவர் ஒருவர் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யுத்த காலத்தில் உயிரைக்காத்து கொள்வதற்காக குறித்த முதியவர் தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற நிலையில் சுமார் 37 ஆண்டுகள் கடந்து நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னையா சிறிலோகநாதன் என்னும் ஏழாலையைச் சேர்ந்தஇவர், யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக நேற்றைய தினம் நாடு திரும்பியபோதே விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற இலட்சக்கணக்கானோர் மத்தியில் இந்த முதியவரும் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் உள்ள முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான அமைப்பில் பதிவு செய்து தாயகம் திரும்பிய போதே நேற்றையதினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் இனிவரும் காலத்தில் தாயகம் திரும்பும் அகதிகள் கைது செய்யப்படுவார்களா என்ற அச்சம் பலர் மத்தியில் எழுப்பப்படுகின்றது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எம்.ஏ சுமந்திரனும் கேள்வியெழுப்பியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதோடு, நாடு திரும்புவதற்காக பதிவு செய்த 10,000 பேரை அரசாங்கம் பயமுறுத்த எடுக்கும் முயற்சியா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
Link: https://namathulk.com/
