அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருடைய சான்றிதழைப் பெற்றவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தில் அகதியாக, பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த ஒருவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
75 வயதான அவர் பலாலி விமான நிலையத்தில் வைத்துக் கடந்த 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னதாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, சட்டபூர்வமற்ற வழியில் நாட்டை விட்டு வெளியேறியவர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருடைய சான்றிதழைப் பெற்ற ஒருவர் மீண்டும் நாடு திரும்பும் போது, அவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்ற கேள்விக்கு இடமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
