மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கிய ரணிலுக்கு எதிரான மனு – உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Aarani Editor
1 Min Read
RanilWickremesinghe

மதுபானச் சட்டத்தை மீறி நிதியமைச்சர் என்ற வகையில் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த அனுமதியை வழங்கியது.

அத்துடன், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் தற்போதைய மதுவரி ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுக்களை மாத்தளையைச் சேர்ந்த வர்த்தகர் தங்கவேலு தனேந்திர ராஜா உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்தனர்.

முன்னாள் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் மதுவரி ஆணையர் எம்.ஜே. குணசிறி உள்ளிட்ட பலர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, பிரதிவாதிகள் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனுக்கும் மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் ஆதாயம் பெறும் மறைமுக நோக்கத்துடன் இவை வழங்கப்பட்டதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம், வழக்கு தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் திகதியிட்டது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *