காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானியை மீளப்பெறுவதாக அரசாங்கம் அறிவித்த நிலையில் இன்று வரை அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வர்த்தமானியை மீளக்கைவாங்கா விட்டால்;, சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேறு தெரிவு எமக்கு இருக்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராது விடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என ஆளும் தரப்பினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் மார்ச் 28 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அந்த அறிவித்தலை ஆளும்தரப்பும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் அரசியல் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு உருவானது.
வர்த்தமானியைத் திரும்பப் பெறாவிட்டால் வடக்கில் அரச செயற்பாட்டு முடக்கப் போராட்டம், சட்டமறுப்புப் போராட்டம் என்பன இடம்பெறும்,
ஜனாதிபதி அநுரகுமார வடக்குக்கு வர முடியாத வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழரசுக் கட்சி அறிவித்திருந்தது.
எனினும், அரசு வெளியிட்ட வர்த்தமானியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேறு தெரிவு எமக்கு இருக்க மாட்டாது என்று தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com
