இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன்களில், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல் வகைகள், இரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், விலங்கு உணவு, இயந்திர வகைகள், பூச்சிக்கொல்லிகள், சீமெந்து, இரும்புக் குழாய்கள், உரம், பலகை போன்றவைதான் இருந்தன.
இந்தக் கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை.
இதுதவிர, இந்தோனேசியா, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும்போது நாங்கள் பின்பற்றிய நடைமுறைகளால், இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்தன என நாங்கள் நம்புகிறோம்.
இந்தப் பொருட்களை விடுவிக்கும் இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.
கடந்த காலத்தில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன.
ஆயுதங்கள் இருக்கலாம், தங்கம் இருக்கலாம், அல்லது போதைப்பொருள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், நாங்கள் பின்பற்றிய இந்த நடைமுறைகளால், இந்தக் கொள்கலன்களில் அவை எதுவும் இல்லை என நம்பிக்கையுடன் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com
